லக்கிம்புரில் கார் ஏற்றி விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்கள்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பாதுகாப்பு வாகனம் ஏறியதில் விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை அடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்றியம் மற்றும் உத்திரபிரதேசத்தில் ஆட்சி நடத்தும் பாரதிய ஜனதா அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
லக்கிம்புர் வன்முறை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பஞ்சாபில் அரங்கேறிய ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விமர்சனம் செய்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த சம்பவத்திற்கு காரணமான அஜய் மிஸ்ராவின் மகன் சிறைக்கு செல்ல வேண்டும் என்றும் தார்மீக பொறுப்பேற்று அஜய் மிஸ்ரா ஒன்றிய அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது கல்வியாளர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்கள். இது ஐரோப்பாவில் தனியொரு ஓநாய் நடத்திய பயங்கரவாத தாக்குதல் அல்ல.
இந்தியாவில் விவசாயிகள் மீது பயங்கரவாத கும்பல் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் என உப்சாலா பல்கலை பேராசிரியர் அசோக் ஸ்வைன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயியினரின் குடும்பத்தினரை சந்திக்க செல்லும் அரசியல் தலைவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்திரப்பிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது? என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் காட்டமாகவும் விமர்சித்திருந்தார்.
ஒருபக்கம் அரசு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டே மறுபக்கம் லக்கிம்புர் தேடி செல்லும் தலைவர்களை தடுத்து நிறுத்துவதன் காரணம் என்ன என்று பிரதமர் மோடியிடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே லக்கிம்புர் விவசாயிகளுக்கு நீதி கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.