ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சட்னியை இப்படி ஈசியாக ஒரு முறை செய்து பாருங்கள்! இனி அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீங்க.

ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைகளை செய்யக்கூடிய இந்த கறிவேப்பிலையை பெரும்பாலும் உணவில் இருந்து அகற்றி விடுவது தான் நம்முடைய வழக்கம்.

அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக சென்றடைய இது போல் சட்னி செய்து சாப்பிடலாம். கருகருவென அலைபாயும் கூந்தலுக்கு கறிவேப்பிலையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் தரும்.

இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் இந்த கருவேப்பிலை சட்னி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

கருவேப்பிலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

எண்ணெய் – தேவையான அளவு, உளுந்து – ஒரு டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் – அரை கப், பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி அளவிற்கு, தேங்காய் துருவல் – அரை கப், தக்காளி – 1, புளி – சிறு நெல்லி அளவு, உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன்.

கருவேப்பிலை சட்னி செய்முறை விளக்கம்:

முதலில் கறிவேப்பிலையை பச்சையாக பிரஷ்ஷாக இருப்பதாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனை இரண்டு கைப்பிடி அளவிற்கு உருவி கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தச் சட்னிக்கு சின்ன வெங்காயம் சேர்த்தால் சூப்பராக இருக்கும். அப்படி உங்களிடம் சின்ன வெங்காயம் இல்லையென்றால் பெரிய வெங்காயம் இரண்டினை தோலுரித்து வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள்.அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

உளுந்து நன்கு வதங்கி வந்ததும் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் 4 பச்சை மிளகாய்களை கீறி சேர்த்து வதக்குங்கள்.

இவை நன்கு வதங்கி வந்ததும் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

கறிவேப்பிலை நன்கு வதங்கினால் தான் அதன் பச்சை வாசம் வராமல் இருக்கும். எனவே அதில் கவனம் செலுத்தி வதக்குங்கள்.கறிவேப்பிலை நன்கு வதங்கியதும் அதில் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் புளி சிறு நெல்லிக்காய் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு வதக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பை அணைத்து ஆற வைத்து விடுங்கள். நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரை கழுவி அதில் இதனை சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த விழுதுடன் இப்பொழுது தாளித்தம் செய்ய வேண்டும்.அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்து வந்ததும் அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அவ்வளவு தான்! இதனை அப்படியே சட்னியில் கொட்டி தாளிப்பு கொடுத்து இட்லி, தோசையுடன் சுடச்சுட பரிமாற வேண்டியது தான்.

ரொம்பவே ஆரோக்கியம் தரும் இந்த கறிவேப்பிலை சட்னியை இதே முறையில் நீங்களும் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE