ஓமிக்ரான் தொற்று மருத்துவ உட்கட்டமைப்புகளை சிதைத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ள நிலையில், கொரோனாவுடன் வாழ நாம் அனைவரும் பழகி கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகினாலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தியவர்கள் உயிரிழப்பில் இருந்து தப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவு தலைவர் பஹீம் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
தரமான முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் கொரோனாவிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஓமிக்ரான் தொற்று பரவல் பாதிப்புகளை அதிகப்படுத்திக் கொண்டு செல்வதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உயிரிழப்பின் விகிதம் குறைவாக இருந்தாலும் மருத்துவ உட்கட்டமைப்புகளை ஓமிக்ரான் சிதைத்து வருவதாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார். எந்த ஒரு நாடும் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியேறவில்லை என்று கூறியுள்ள டெட்ராஸ் , பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தியவர்கள் விகிதம் மிக குறைவாக இருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஓமிக்ரான் தொற்றாலும் மரணம் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.