தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத தந்தை, மகளை காணத் தடை விதித்து கனடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கனடாவில் தற்போது மற்ற மேலை நாடுகள் போலவே ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடுப்புமருந்து 2 டோஸ் செலுத்தப்படாத கனடா குடிமக்களுக்கு அதிக நெருக்கடியைக் கொடுத்து அவர்களை தடுப்பு மருந்து செலுத்த ஊக்குவித்து வருகிறார். இந்த நெருக்கடியின் ஒரு பகுதியாக தற்போது நடைபெற்ற ஓர் சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கனடாவின் கியூபெக் பகுதியில் 2 டோஸ் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளாத தந்தை தனது 12 வயது மகளைக் காண மாகாண நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. மகளிர் நலம் கருதி இந்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த டிச.,30 முதல் கனடாவின் மற்ற மாகாணங்கள்போல கியூபெக் மாகாணத்திலும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தளர்வான கட்டுப்பாடுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 90 சதவீத மக்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து பெற்றுள்ள நிலையில் அலட்சியம் காட்டும் 10 சதவீத குடிமக்களை எச்சரிக்கும் வகையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.