உலக பொருளாதாரம் கடந்த ஆண்டின் டெல்டா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துக்கொண்டிருக்கும் நிலையில், வேகமாக பரவக் கூடிய ஒமைக்ரான், தொற்று எண்ணிக்கையை உயர்த்துவதால், பொருளாதாரம் மீண்டும் தடுமாற்றத்தைச் சந்திப்பதாக அத்துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
உலக வங்கி செவ்வாயன்று 2022க்கான அதன் கணிப்புகளை குறைத்துள்ளது. ஒமைக்ரான் மற்றும் பிற காரணிகள் ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்புகளால் இந்தாண்டு வளர்ச்சியானது குறிப்பிடத்தக்க அளவு குறையும் என்கிறது. 2021ல் 5.5 சதவீதத்திற்கு மீண்ட வளர்ச்சியானது, இந்தாண்டு 4.1 சதவீதமாக குறையும், 3.4 சதவீதம் வரை சரியவும் வாய்ப்பு உண்டு என எச்சரிக்கிறது.
அதே போல் ஐ.எம்.எப்., அமைப்பும் தனது வளர்ச்சி கணிப்புகளை குறைக்கக் கூடும் என அதன் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா கோடிட்டு காட்டியுள்ளார். பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸின், தலைமைப் பொருளாதார நிபுணர் மார்க் சாண்டி கூறியதாவது: இந்தாண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவின் வளர்ச்சி 2.2 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
இது முந்தைய மதிப்பீடான 5.2 சதவீதத்தை விட பாதியளவு தான். செலவிடுதல் குறைதல், உணவக முன்பதிவுகளில் சரிவு, விமான ரத்துகள், பள்ளிகள் மூடப்பட்டு மீண்டும் ஆன்லைன் கல்விக்கு திரும்புதல் ஆகியவை ஒமைக்ரான் பொருளாதார சேதம் ஏற்படுத்துவதை காட்டுகிறது.
இருப்பினும், ஒமைக்ரான் விரைவாக கடந்து செல்லும். இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி மீண்டும் எழும். ஒவ்வொரு அலையும், முந்தைய அலையைவிட சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு குறைவான சேதத்தையே ஏற்படுத்தும். இவ்வாறு கூறினார்.