மூன்றே படங்கள் : மூவாயிரம் கோடி வசூல்

கொரோனா அலைகளுக்குப் பிறகு பல தொழிலும் முடங்கியது. குறிப்பாக சினிமா துறை நிறையவே சோதனைகளை எதிர்கொண்டது. பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. பல நாட்களில் 50 சதவீத இருக்கை அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது.

தியேட்டர்களை நிரந்தரமாக மூடி விடலாமா என தியேட்டர்காரர்களும் யோசித்து வந்தார்கள். ஆனாலும், சில பிரம்மாண்ட படங்கள் வெளிவந்து அவர்களைக் காப்பாற்றியது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிற்குமே சேர்த்து டப்பிங் படங்கள் தான் காப்பாற்றியது என்று சொன்னால் அது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.

2021ன் டிசம்பர் மாதக் கடைசியில் வெளிவந்த ‘புஷ்பா’, கடந்த மாதம் வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’, இந்த மாதம் வெளிவந்த ‘கேஜிஎப் 2’ ஆகிய படங்கள் மொத்தமாக மூவாயிரம் கோடி வசூலைப் பெற்று மிரள வைத்திருக்கின்றன.

‘புஷ்பா’ படம் தியேட்டர் வசூலாக 360 கோடியையும், ‘ஆர்ஆர்ஆர்’ படம் தியேட்டர் வசூலாக 1100 கோடியையும், ‘கேஜிஎப் 2’ படம் 1000 கோடியையும் கடந்து சாதனை புரிந்திருக்கின்றன. ‘புஷ்பா, ஆர்ஆர்ஆர்’ இரண்டு படங்களும் தெலுங்கில் தயாராகி மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டன. ‘கேஜிஎப் 2’ படம் கன்னடத்தில் தயாராகி மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. இப்படி பிராந்திய மொழி திரைப்படங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் வசூலைக் குவித்து ஹிந்தித் திரையுலகினருக்கு கடும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளன.

தியேட்டர்களில் இருந்து வசூலாக மூன்று படங்களும் பெற்ற தொகை 2460 கோடி. ஐந்து மொழிகளுக்கான ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, இதர உரிமைகள் ஆகியவை மூன்று படங்களுக்குமாக சேர்த்து 500 கோடியைக் கடந்தது. ஒட்டு மொத்தமாக 3000 கோடி அளவிற்கு இந்தப் படங்கள் வருவாயைப் பெற்றுள்ளது.

‘புஷ்பா’ படம் 200 கோடி ரூபாய் செலவில் தயாராகி தியேட்டர் உரிமையாக 150 கோடிகளுக்கு விற்பனையாகி 360 கோடியை வசூலித்தது. ‘ஆர்ஆர்ஆர்’ படம் 500 கோடி செலவில் தயாராகி 520 கோடிக்கு விற்பனையாகி 1100 கோடியை வசூலித்தது. ‘கேஜிஎப் 2’ படம் 100 கோடி செலவில் தயாராகி 350 கோடிக்கு விற்பனையாகி 1000 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இந்த தென்னிந்தியப் படங்களின் வெற்றி இந்திய அளவில் மொழி எல்லைகளை மாற்றி அமைத்துள்ளது. எந்த மொழியில் படங்கள் தயாரானலும் பரவாயில்லை அதைத் தங்களது தாய்மொழியில் பார்த்து ரசிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை புரிய வைத்துள்ளது.

இந்தப் படங்களின் வெற்றி பாலிவுட்டில் பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. தென்னிந்தியாவிலிருந்து செல்லும் படங்கள் ஒரிஜனல் ஹிந்திப் படங்களைக் காட்டிலும் வசூலில் சாதனை புரிவது பாலிவுட்டினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவர்களும் சில பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்து மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், அந்தப் படங்கள் சில கோடி வசூலைக் கூடப் பெற முடியாமல் தள்ளாடின.

இந்திய சினிமா என்றால் இதுவரையில் ஹிந்தி சினிமா மட்டும்தான் என்று உலக அளவில் பார்க்கப்பட்டது. அந்த பிம்பத்தை ‘புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2’ ஆகிய படங்கள் சுக்குநூறாக உடைத்துவிட்டன. இந்தப் படங்களையும் இந்தியப் படங்கள் எனக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

ஹிந்தியிலிருந்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க வந்தால் அது ஏதோ குறைவான ஒரு விஷயமாகப் பார்த்து வந்தார்கள் ஹிந்தி நடிகர்கள், நடிகைகள். ஆனால், இப்போது அனைத்துமே மாறிவிட்டன. ஹிந்திப் படங்களில் நடித்து கிடைக்காத பேரும், புகழும் தென்னிந்தியப் படங்களின் மூலமும் கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள்.

தெலுங்கு சினிமாவும், கன்னட சினிமாவும் 1000 கோடி வசூலை சாதித்துவிட்டன. ஆனால், தமிழ் சினிமா இன்னும் 1000 கோடிக்கான ஒரு படத்தை உருவாக்கவில்லை என்பது சோகமே. தாங்கள் மட்டும் 100 கோடி சம்பாதித்தால் போதும் என்று நினைக்கும் சில ஹீரோக்கள் தமிழ் சினிமாவும் 1000 கோடி வசூலைப் பெற கொஞ்சம் பொறுப்போடு செயல்படுவார்களா என தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE
Audio Player