நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கான சிறப்புக் காட்சிகள் படம் வெளியாகும் தினமான ஏப்ரல் 13ம் தேதி அதிகாலை 4 மணி காட்சி, காலை 7 மணி காட்சிகள் பல தியேட்டர்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். அதற்கான டிக்கெட் கட்டணங்கள் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதிக பட்சமாக டிக்கெட் விலை 190 ரூபாய் வரை உள்ள நிலையில் அந்த டிக்கெட்டுகளின் விலை 1500 ரூபாய் வரை விற்கப்படுவது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தைத் தயாரித்திருப்பது திமுக ஆதரவு நிறுவனமான சன் பிக்சர்ஸ், படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுவது முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்.
ஆளும் கட்சியின் ஆதரவு நிறுவனங்களின் படம் என்பதால் எவ்வளவு விலை வைத்து டிக்கெட் விற்றாலும் கண்டு கொள்ள மாட்டார்கள் என விற்று வருகிறார்களாம். பெரும்பாலான தியேட்டர்களில் அந்த சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அநியாய விலைக்கு விற்று முடிக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
ரசிகர்களிடம் இருந்து அநியாயமாக கூடுதலாகப் பெறப்பட்ட தொகை தியேட்டர்காரர்களுக்கு மட்டுமே சேரும் என்றால் அது படத்தைத் தயாரித்திருக்கும் நிறுவனத்திற்கும், வெளியிடும் நிறுவனத்திற்கும் இழப்பு தான். அவர்களது பெயரைச் சொல்லி தியேட்டர்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் என்றும் திரையுலகில் சொல்கிறார்கள். அதே சமயம் இப்படி பெறப்படும் கூடுதல் தொகையில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தயாரிப்பு நிறுவனமும், வெளியிடும் நிறுவனமும் சொல்வார்களா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழக அரசாங்கத்திற்கு வருமானம் இல்லை என்பதால் சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால், சிறப்புக் காட்சிகள் என்ற பெயரில் இப்படி அநியாயமாக வசூலிக்கப்படும் சினிமா டிக்கெட் கட்டணங்கள் அரசுக்கும் இழப்பை ஏற்படுத்துகிறது என்பது சம்பந்தப்பட்ட துறையின் அரசு அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ தெரியாமல் இருக்குமா. இப்படியான இழப்புகளை சரி செய்தாலே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வரி விதிப்புகளை செய்யாமல் இருக்க முடியுமே. அதற்கு இந்த சினிமா டிக்கெட் கட்டணக் கொள்ளை ஒரு உதாரணம்.