ஆஸ்கர் விழா மேடையில் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த நடிகர் வில் ஸ்மித்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்கர் விருது குழு, இது தொடர்பான விசாரணையையும் தொடங்கியிருக்கிறது.
விழா மேடையில் தனது எல்லை மீறிய செயலுக்கு கிறிஸ் ராக்கிடம் வில் ஸ்மித் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். மனைவியை உருவ கேலி செய்த கிறிஸ் ராக்கை, ஆஸ்கர் விழா மேடையிலேயே வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த காட்சி உலகம் முழுவதும் விவாத பொருளாகியுள்ளது.
கிறிஸ் ராக் உடனே சுதாரித்துக்கொண்டு நிலைமையை சமாளிக்க முயற்சிக்க இருக்கைக்கு சென்ற பிறகும் கொந்தளித்தார் வில் ஸ்மித். அடுத்த சில நிமிடங்களில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வில் ஸ்மித்திற்கே அறிவிக்கப்பட, மேடையிலேயே தமது செயலுக்கு அவர் கண்ணீர்மல்க மன்னிப்பு கேட்டார்.
தமது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கிறிஸ் ராக்கிடம் வில் ஸ்மித் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். மனைவியின் மருத்துவ நிலை குறித்த நக்கியாடலை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்பது வில் ஸ்மித்தின் ஆதங்கம்.
ஆனாலும் பிரச்சனை அதோட முடியவில்லை. வில் ஸ்மித்தின் நடத்தையை கண்டித்துள்ள ஆஸ்கர் விருது கமிட்டி, இது தொடர்பான விசாரணையையும் தொடங்கியுள்ளது. தவறான நடத்தை, தொல்லை தருதல், பாரபட்சம் காட்டுதல் போன்ற காரணங்களுக்காக ஆஸ்கர் விருதுகள் பறிக்கப்படலாம் என்று அதன் விதிகள் கூறுகின்றன. வில் ஸ்மித் சர்ச்சையில் இந்த அளவுக்கு உச்சபட்ச தண்டனையை ஆஸ்கர் விருது கமிட்டி பரிந்துரைக்குமா என்பது கேள்விக்குறியே.