ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்த நடிகர்

94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவி குறித்து நக்கலாக பேசிய தொகுப்பாளரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். இந்த சம்பவம் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகளவில் சினிமா துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. நிகழ்ச்சியை அமெரிக்காவின் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து நகைச்சுவைக்காக கிண்டலாக கிறிஸ் ராக் பேசினார்.

ஜிஐ ஜேன் என்னும் திரைப்படத்தில் ராணுவ வீராங்கனையின் தோற்றம் மொட்டை தலையுடன் இருபு்பது போன்று உருவாக்கப்பட்டிருக்கும். இதனை குறிப்பிட்டு, ஜிஐ ஜேன் படத்தின் 2ம் பாகத்திற்காக ஜடா காத்திருப்பது போல அவரது தோற்றம் உள்ளது என கிறிஸ் பேசியதும் சற்றே கோபமான வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ் ராக்கை ஓங்கி பளார் என அறைந்தார். இது காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனாலும் கிறிஸ் கோபத்தை அடக்கி கொண்டு மீண்டும் நகைச்சுவையாக பேசினார். அலோபீசியா என்னும் நோயினால் முடியை இழந்து வருகிறார் ஜடா ஸ்மித். இப்படிப்பட்ட சூழலில் கிறிஸ் கிண்டல் செய்தது வில் ஸ்மித்தை கோபமடைய செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே வில் ஸ்மித்தின் இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE