நூற்றாண்டில் இசையரசர்

பாட்டும் நானே பாவமும் நானே… என தன் குரலில் பாடலையும், பல வித பாவனைகளையும் கொடுத்து இசை ரசிகர்களை இன்றும் கட்டி போட்டு வைத்திருப்பவர் டிஎம்எஸ் எனும் டிஎம் சவுந்தர்ராஜன். மதுரையிலேயே பிறந்து தன் குரலால் தமிழ் ரசிகர்களை மயக்கியவர். 1950லிருந்து 1985வரை ஏறக்குறைய 35 ஆண்டுகள் தமிழ் திரையிசையின் ஆளுமையாக இருந்தார். இன்று அவரின் 100வது பிறந்தநாள். அவரை பற்றி இங்கு பார்க்கலாம்.

டி.எம்.சவுந்தர்ராஜன் அவர்களின் இயற்பெயர் தொகுளுவ மீனாட்சி ஐயங்கார் சவுந்தர்ராஜன். சுருக்கமாக டிஎம்எஸ் என்று அழைக்கப்பட்டார். 1922ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் மீனாட்சி அய்யங்காருக்கும், வெங்கட்டம்மாளுக்கும் மூன்றாவது புதல்வராக பிறந்தார்.

முதல் வாய்ப்பு
இவருடைய முதல் இசை குரு ராஜாமணி அய்யங்கார். பிரபல இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்னி ஜுபிடர் நிறுவனத்திற்காக தான் இயக்கவிருந்த “கிருஷ்ண விஜயம்” என்ற திரைப்படத்தில் டிஎம்எஸிற்கு பாடும் வாய்ப்பினை முதன் முதலில் பெற்றுத் தந்தார். இப்படத்திற்கு இசை அமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

முதல் படத்திலேயே நான்கு பாடல்கள் பாடும் வாய்ப்பைப் பெற்றார் டிஎம்எஸ். இதனைத் தொடர்ந்து 1950ல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான “மந்திரிகுமாரி” திரைப்படத்திலும், அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே என்ற பாடலை இசை அமைப்பாளர் ஜி.ராமனாதனின் இசையில் முதன்முதலாக பாடினார்.

1951 ஆம் ஆண்டு கணபதி பிக்சர்ஸ் சார்பில் உருவான திரைப்படம் தேவகி. இப்படத்தில் “தீராத துயராலே பாழாகியே” என்ற பாடலை பாடியதோடு மட்டுமின்றி முதன்முதலாக திரையில் தோன்றினார். ஏ.வி.எம் நிறுவனத்தின் நிரந்தர இசை அமைப்பாளரான சுதர்சனம், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்ததினால் “செல்லப்பிள்ளை” என்ற படத்திலும் இரண்டு பாடல்கள் பாடும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. அன்றைய காலகட்டங்களில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கிய எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோருக்கு பெரும்பாலும் பின்னணிப் பாடி வந்தவர் பின்னணிப் பாடகர் சி.எஸ்.ஜெயராமன் ஆவார்.

சிவாஜிக்கு முதல் பாடல்
1954 ஆம் ஆண்டு அருணா பிலிம்ஸ் சார்பில் நடிகர் சிவாஜி கணேசனை வைத்து ஆடல் பாடல்கள் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படமான “தூக்கு தூக்கி” என்ற திரைப்படம் தயாரித்தனர். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் டி எம் சவுந்தர்ராஜனைக் கொண்டே பாட வைத்திருந்தார் இசை அமைப்பாளர் ஜி ராமனாதன். “சுந்தரி சௌந்தரி நிரந்தரியே”, “ஏறாத மலைதனிலே”, “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” போன்ற அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.

எம்ஜிஆருக்கு முதல் பாடல்
எம் ஜி ஆரும், சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியில் சிவாஜிக்காக டி எம் சவுந்தர்ராஜன் பின்னணிப் பாடியதைக் கேட்ட எம்ஜிஆர் தனக்கும் இவரே பாட வேண்டும் என்று சிபாரிசு செய்ததன் விளைவு “மலைக்கள்ளன்” திரைப்படத்தில் “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்” என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாக பின்னணிப் பாடினார் டி.எம்.சவுந்தர்ராஜன்.

கோலோச்சிய டிஎம்எஸ்
ஜி ராமனாதன், எஸ் எம் சுப்பையா நாயுடு, கே வி மஹாதேவன், டி ஜி லிங்கப்பா என அன்றைய இசை ஜாம்பவான்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்த இதே காலக்கட்டங்களில் மெல்லிசையை திரை இசையில் அள்ளித் தெளித்தது “விஸ்வநாதன் ராமமூர்த்தி” என்ற இந்த இரட்டையர்களின் வருகை.

இயக்குநர் பீம்சிங், சிவாஜி கணேசன், கூட்டணியில் வந்த ‘பா’ வரிசைப் படங்களான பாசமலர், “பாவமன்னிப்பு”, “பாலும் பழமும்”, “பார்த்தால் பசி தீரும்”, “பார் மகளே பார்” மற்றும் “பச்சை விளக்கு” என ஒரு புறமும், சாண்டோ எம்.எம்.சின்னப்ப தேவர், எம் ஜி ஆர் கூட்டணியில் ‘தா’ வரிசைப்படங்களான “தாய்க்குப் பின் தாரம்” தாய் சொல்லைத் தட்டாதே “தாயைக் காத்த தனயன்”, “தர்மம் தலைகாக்கும்” மற்றும் “தாய்க்கு தலைமகன்” என மறு புறமும் இவர் பாடாத படங்களே இல்லை எனும் அளவுக்கு திரையிசையில் கோலோச்சியிருந்தார்.

ஜெய்சங்கருக்கு அதிகம்
எம் ஜி ஆர் படங்களில் ஒரிரு பாடல்கள் எஸ் பி பாலசுப்ரமணியம், கே.ஜே ஜேசுதாஸ் போன்றோர் பாடியிருந்தாலும் அவர் திரையுலகில் இருந்த காலம் வரை அவரது கடைசிப் படமான “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” திரைப்படம் வரை எம் ஜி ஆருக்கு பின்னணிப் பாடிய பெருமை இவருக்கு உண்டு. மேலும் டி எம் சவுந்தர்ராஜன், எம் ஜி ஆர், சிவாஜி கணேசனுக்கு பின்னணிப் பாடியதைக் காட்டிலும் அதிகமாக நடிகர் ஜெய்சங்கருக்கே இவர் பின்னணிப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இளையராஜா இசையிலும் ஒலித்த டிஎம்எஸ் குரல்
இளையராஜாவின் முதல் படமான “அன்னக்கிளி” தொடங்கி அவரது ஆரம்பகால படங்களில் நெஞ்சைவிட்டு அகலாத பல அருமையான பாடல்களை பாடியிருக்கின்றார். எம்ஜிஆர், சிவாஜி என ஆரம்பித்து அடுத்த தலைமுறை நாயகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் போன்றோருக்கும் பின்னணி பாடியிருப்பது வியப்பான ஒன்று. 1950லிருந்து 1985வரை ஏறக்குறைய 35 ஆண்டுகள் தமிழ் திரையிசையின் ஆளுமையாக இருந்தார் என்றால் அது மிகை அல்ல.

நடிப்பு, தயாரிப்பு
“பட்டினத்தார்”, “அருணகிரிநாதர்”, “கல்லும் கனியாகும்” ஆகிய படங்களில் நடித்து தனது நடிப்பாற்றலையும் வெளிக்காட்டிய பெருமை இவருக்கு உண்டு. “கலலும் கனியாகும்” திரைப்படத்தை பிரபல பின்னணிப் பாடகரான ஏ.எல்.ராகவனுடன் இணைந்து தயாரித்து தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் காட்டிக் கொண்டார்.

உருக வைத்த பக்தி பாடல்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஏறக்குறைய அனைத்து இந்திய மொழிகளிலும் 10000க்கும் அதிகமான திரைப்பட பாடல்களையும் 3000க்கும் அதிகமான பக்தி பாடல்களையும் பாடியிருக்கின்றார். அதிலும் முருகனை பற்றி இவர் பாடிய பக்தி பாடல்கள் உருகாத உள்ளமும் உருகும்.

விருதுகள்
2003ம் ஆண்டு இந்திய அரசால் “பத்மஸ்ரீ விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டார். 60, 70, மற்றும் 80ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறந்த பாடகருக்கான “தமிழ்நாடு அரசு சினிமா விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

டிஎம்எஸிற்கு இன்று நூற்றாண்டு பிறந்தநாள். இவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் கொடுத்து சென்ற பாடல்கள் என்றும் அமுதகானமாய் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

டிஎம்எஸ் குரலில் குறிப்பிடும்படியான 100 தனிப்பாடல்கள்

1.எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – மலைக்கள்ளன்
2.பெண்களை நம்பாதே கண்களே – தூக்கு தூக்கி
3.நாணயம் மனுஷனுக்கு அவசியம் – அமரதீபம்
4.நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே – சதாரம்
5.மனுஷன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே – தாய்க்குப் பின் தாரம்
6.சிந்தனை செய் மனமே – அம்பிகாபதி
7.மணப்பாறை மாடு கட்டி – மக்களைப பெற்ற மகராசி
8.ஏரிக்கரையின் மேலே போறவளே – முதலாளி
9.வா கலாப மயிலே – காத்தவராயன்
10.தூங்காதே தம்பி தூங்காதே – நாடோடி மன்னன்
11.வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே – பதிபக்தி
12.ஏன் பிறந்தாய் மகனே – பாகப்பிரிவிணை
13.அச்சம் என்பது மடமையடா – மன்னாதி மன்னன்
14.உள்ளதை சொல்வேன் நல்லதை செய்வேன் – படிக்காத மேதை
15.வானில் முழு மதியைக் கண்டேன் – சிவகாமி
16.சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா – அரசிளங்குமரி
17.பாலும் பழமும் கைகளில் ஏந்தி – பாலும் பழமும்
18.போனால் போகட்டும் போடா – பாலும் பழமும்
19.மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – பாசமலர்
20.வந்த நாள் முதல் இந்த நாள் வரை – பாவமன்னிப்பு
21.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் – பாவமன்னிப்பு
22.திருடாதே பாப்பா திருடாதே – திருடாதே
23.பொன்னை விரும்பும் பூமியிலே – ஆலயமணி
24.சட்டி சுட்டதடா கை விட்டதடா – ஆலயமணி
25.நான் என்ன சொல்லிவிட்டேன் – பலே பாண்டியா
26.யாரை எங்கே வைப்பது என்று – பலே பாண்டியா
27.மாறாதைய்யா மாறாது – குடும்பத்தலைவன்
28.திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் – குடும்பத்தலைவன்
29.ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் – நிச்சய தாம்பூலம்
30.பாவாடை தாவணியில் பார்த்த உருவமா – நிச்சய தாம்பூலம்
31.படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் – நிச்சய தாம்பூலம்
32.உலகம் பிறந்தது எனக்காக – பாசம்
33.அண்ணன் காட்டிய வழியம்மா – படித்தால் மட்டும் போதுமா
34.நான் கவிஞனுமில்லை – படித்தால் மட்டும் போதுமா
35.ஓஹோ ஹோ ஹோ மனிதர்களே – படித்தால் மட்டும் போதுமா
36.கட்டித் தங்கம் வெட்டி எடுத்து – தாயைக் காத்த தனயன்
37.நடக்கும் என்பார் நடக்காது – தாயைக் காத்த தனயன்
38.ஒரு தாய் மக்கள் நாம் என்போம் – ஆனந்த ஜோதி
39.கடவுள் இருக்கிந்றான் அது நம் கண்ணுக்கு – ஆனந்த ஜோதி
40.தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் – தர்மம் தலைகாக்கும்
41.ஒருவன் மனது ஒன்பதடா – தர்மம் தலைகாக்கும்
42.மயக்கம் எனது தாயகம் – குங்குமம்
43.பார் மகளே பார் – பார் மகளே பார்
44.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே – பணத்தோட்டம்
45.பாரப்பா பழனியப்பா – பெரிய இடத்துப் பெண்
46.அவனுக்கென்ன தூங்கிவிட்டான் – பெரிய இடத்துப் பெண்
47.கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் – வானம்பாடி
48.ஆறு மனமே ஆறு – ஆண்டவன் கட்டளை
49.முத்தைத்தரு – அருணகிரிநாதர்
50.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் – தெய்வத்தாய்
51.ஒரு பெண்ணைப் பார்த்து நிலவை – தெய்வத்தாய்
52.ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ – கை கொடுத்த தெய்வம்
53.இரவினில் ஆட்டம் – நவராத்திரி
54.கேள்வி பிறந்தது அன்று – பச்சை விளக்கு
55.ஒளி மயமான எதிர்காலம் – பச்சை விளக்கு
56.தரைமேல் பிறக்க வைத்தான் – படகோட்டி
57.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் – படகோட்டி
58.நான் ஒரு குழந்தை – படகோட்டி
59.கல்யாண பொண்ணு – படகோட்டி
60.எங்கே நிம்மதி – புதிய பறவை
61.ஆஹா மெல்ல நட மெல்ல நட – புதிய பறவை
62.அதோ அந்த பறவை – ஆயிரத்தில் ஒருவன்
63.ஏன் என்ற கேள்வி – ஆயிரத்தில் ஒருவன்
64.ஓடும் மேகங்களே – ஆயிரத்தில் ஒருவன்
65.நான் ஆணையிட்டாள் – எங்க வீட்டுப் பிள்ளை
66.காற்று வாங்கப் போனேன் – கலங்கரை விளக்கம்
67.பாட்டும் நானே பாவமும் நானே – திருவிளையாடல்
68.யார் அந்த நிலவு – சாந்தி
69.அண்ணன் என்னடா தம்பி என்னடா – பழனி
70.ஓராயிரம் பார்வையிலே – வல்லவனுக்கு வல்லவன்
71.அன்பே வா – அன்பே வா
72.புதிய வானம் புதிய பூமி – அன்பே வா
73.செல்லக் கிளியே மெல்லப் பேசு – பெற்றால்தான் பிள்ளையா
74.தெய்வம் இருப்பது எங்கே – சரஸ்வதி சபதம்
75.மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள் – இரு மலர்கள்
76.அந்த நாள் ஞாபகம் – உயர்ந்த மனிதன்
77.தாயில்லாமல் நானில்லை – அடிமைப் பெண்
78.கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா – தெய்வ மகன்
79.செல்லக் கிளிகளாம் – எங்க மாமா
80.அங்கே சிரிப்பவர்கள் – ரிக்ஷாக்காரன்
81.நிலவைப் பார்த்து வானம் சொன்னது – சவாலே சமாளி
82.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு – என் அண்ணன்
83.ஒரு பக்கம் பாக்குறா – மாட்டுக்கார வேலன்
84.பொன்மகள் வந்தாள் – சொர்க்கம்
85.உன் கண்ணில் நீர் வழிந்தால் – வியட்நாம் வீடு
86.எங்கே அவள் – குமரிக்கோட்டம்
87.கடலோரம் வாங்கிய காற்று – ரிக்ஷாக்காரன்
88.அன்னமிட்ட கை நம்மை – அன்னமிட்ட கை
89.தேவனே என்னை பாருங்கள் – ஞான ஒளி
90.நான் பாடும் பாடல் – நான் ஏன் பிறந்தேன்
91.சித்திரச் கோலைகளே – நான் ஏன் பிறந்தேன்
92.என்னடி ராக்கம்மா பல்லாக்கு – பட்டிக்காடா பட்டணமா
93.நீயும் நானுமா கண்ணா – கௌரவம்
94.பாலூட்டி வளர்த்த கிளி – கௌரவம்
95.நிலவு ஒரு பெண்ணாகி – உலகம் சுற்றும் வாலிபன்
96.நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் – தியாகம்
97.அம்மா நீ சுமந்த பிள்ளை – அன்னை ஓர் ஆலயம்
98.எந்தன் பொன் வண்ணமே – நான் வாழ வைப்பேன்
99.நண்டூருது நரியூருது – பைரவி
100.அன்னக்கிளி உன்னைத் தேடுது – அன்னக்கிளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE