தமிழக அரசு இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வர இருக்கிறது. அதன் முதல் கட்டமாக உயர்கல்வி கற்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதனை பாடலாசிரியர் தாமரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
வெளிவேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து தன் வீட்டு வேலைகளை, தன் குழந்தைகளை மட்டுமே பார்த்துக் கொள்ளும், கணவனின் ஊதியத்தை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘இல்லத்தரசி’களுக்கு 1000 ரூபாய் மாத உதவி தருவதாக சிலகாலமாக அரசியல் கட்சிகள் பேசி வருகின்றனர். அப்போதே நினைத்தேன், இதென்ன மடத்தனம், தம் குடும்பங்களைக் கவனித்துக் கொண்டு வீட்டிலிருக்கும் பெண்களுக்கு எதற்காக அரசாங்கம் உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்று.
தன் வீட்டில் தனக்காக, தன் குழந்தைகளுக்காக, தன் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிக்கு ஊதியம் தர வேண்டியது அந்த உழைப்பின் பலனை அனுபவிக்கும் கணவனது பொறுப்பு. அரசாங்கம் எதற்காகக் கொடுக்க வேண்டும். ‘நீ எதற்காக என் மனைவிக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் ?’ என்று ஓர் எதிர்ப்புக் குரல்கூட வரவில்லையே, எப்படி இந்த சிக்கலை வேறுவகையில்தான் எதிர்கொண்டாக வேண்டுமேயொழிய அரசாங்கம் உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்பது தவறான கருத்து.
வீட்டுவேலையும் செய்துகொண்டு வெளிவேலைக்கும் போய்வரும் பெண்களின் நிலையை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமில்லையா ? அவர்களெல்லாம் முட்டாள்களா ? அவர்களுக்கும் அரசாங்கம் பரிவுத்தொகை ஏதேனும் கொடுக்குமா ? இன்னும் ஒருபடி மேலே போய், வேலைவெட்டியில்லாத ஆணுக்கு, வெளியே உழைத்து சோறும் போட்டு வீட்டுவேலையும் செய்து மாளும் தெய்வப்பிறவிகளை எந்தக் கணக்கில் சேர்க்க ?
சரியாகச் சொன்னால், இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுவேலை போக, மற்றுமொரு பணியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லையே… வெளியே அலுவலகப்பணிக்குதான் போகவேண்டும் என்பதில்லையே .தங்கள் தனித்திறனுக்கேற்ப – தையல், பிறர்குழந்தைபார்த்தல், தின்பண்டங்கள் செய்து தருதல், பாடம் சொல்லித்தருதல் – நூற்றுக்கணக்கான தெரிவுகள் உள்ளனவே! ஏதேனுமொன்றைச் செய்து கௌரவமாகப் பொருளீட்ட இயலுமே… அதென்னது, அரசாங்கத்திடமிருந்து ‘இலவசமாக’ உதவி எதிர்பார்ப்பது
வெளிவேலைக்குச் செல்லும் இலட்சக்கணக்கான பெண்களின் வரிப்பணத்திலிருந்து தான் இதைச் சுரண்ட வேண்டும். நான் இதைச் சற்றும் ஆதரிக்கவில்லை. தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இதைச் சொல்வதால் எனக்கு எதிர்ப்பு எழும் என்று தெரிந்தேதான் சொல்கிறேன். தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த திட்டத்தைக் கைவிடுக.
ஒருவேளை இதைச் செயல்படுத்தித்தான் தீர வேண்டுமெனில், அந்த பணத்துக்கு ஈடான உழைப்பை அவர்களிடமிருந்து பெற்று விட்டு வழங்குக.
இவ்வாறு தாமரை எழுதியுள்ளார்.