நீண்ட இடைவெளிக்கு பிறகு அமலா நடிக்கும் படம் கணம், இதில் சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. தெலுங்கில் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோருக்கு பதிலாக வெண்ணிலா கிஷோர் மற்று ப்ரியதர்ஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
இது அம்மா மகன் உறவின் மேன்மையை சொல்லும் படம். அம்மாவை உதாசீனப்படுத்தி வாழும் மகன் அவளது இறப்புக்கு பிறகு எப்படி தவிக்கிறான் என்பதையும், டைம் மிஷின் மூலம் பல ஆண்டுகள் பின்னால் சென்று இழந்த அம்மாவின் அன்பை மீண்டும் பெற்று வாழ்வது மாதிரியான கதை.
இந்த படத்தில் இடம் பெற இருக்கும் அம்மா பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த பாடல்தான் படத்தை உருவாக்க உதவி செய்தது என்கிறார் இயக்குனர் ஸ்ரீகார்த்திக்.
அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு படத்திலுமே படத்தின் கதையோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் சில பாடல்கள் அமையும். அந்தப் பாடலைக் கேட்டாலே படத்தின் கதைக்களத்தை நம்மால் உணர்த்துக் கொள்ள இயலும். அப்படி கணம் படத்தில் ‘அம்மா’ பாடல் அமைந்திருக்கிறது.
அம்மா பாடல் தான் கணம் படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான் இந்தப் படம் உருவாக காரணமாக அமைந்தது. ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு அம்மா பாடல் என்று சொல்வேன்.
3 வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம். இந்த பாடலை கேட்ட பிறகுதான், அடுத்து வரப்போகும் நாட்களில் எந்தப் பார்வையோடு இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. படப்பிடிப்பின் போது எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க இந்த அம்மா பாடல் தான் உதவியது.
தெலுங்கில், மறைந்த பாடலாசிரியர் ஸ்ரீவெண்ணெலா எழுதிய கடைசி பாடல் இது. முதலில் நாங்கள் தெலுங்கு மொழியில் பாடலைத் தயார் செய்திருந்தாலும் அதை தமிழுக்கு அப்படியே மாற்றவில்லை. பாடலின் அதே கருவை வைத்துத் தமிழில் மொத்தமாக புதிய வரிகளை உருவாக்கி இருக்கிறோம்.
மன்னன் படத்தில் வந்த ‘அம்மா என்றழைக்காத…’ வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற ‘அம்மா.. அம்மா..’ போன்ற பாடல்களுக்குப் பிறகு இந்த அம்மா.. பாடல் அனைத்து வயதினரையும் கொண்டாட வைக்கும். தனது அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை தரும் பாடலாக இது இருக்கும். என்கிறார்.