விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் விஷால் பேசியதாவது: து.ப.சரவணனின் ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை கூப்பிட்டு பாராட்டினேன். அவரிடம், நல்ல கதை இருந்தால் கூறுங்கள் என்றேன். அப்படி உருவானது தான் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையை விட திரைக்கதை தான். புதிய இயக்குனருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறேன். சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
புது இயக்குனரிடம் நல்ல கதையை கேட்டு விட்டால், யுவன் தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன். இப்படத்திருக்கும் அதேபோல் யுவன் தான் மியூசிக். நாயகி டிம்பிளை ஒரு விழாவில் எடுத்த ஸ்டில்லை பார்த்து ஒப்பந்தம் செய்தோம். அவரை இப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். தமிழில் நீண்ட தூரம் பயணிப்பார் என்பதில் சந்தேகமில்லை. நாயகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் சில படங்கள் தான் வெற்றியடையும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம் அனைத்துமே வெற்றியடையும். அந்த வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெரும்.
என்னைப் பொறுத்தவரை கமலா சினிமாஸ் திரையரங்கம் இல்லை; கோவில். என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னுடைய நண்பர்கள் என்று தான் கூறுவேன். இவ்வாறு விஷால் பேசினார்.
இயக்குனர் து.ப.சரவணன் பேசுகையில், இந்த கதை வெற்றியடையும் என ஊக்கமளித்தவர் கருந்தேள் ராஜேஷ். அதேபோல், இறுதி வரை துணையாக இருந்தவர் பொன் பார்த்திபன். இந்த வாய்ப்பு கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. இன்று நான் இங்கு நிற்பதற்கு காரணம் விஷால் சார் தான். இப்படத்தின் கதையை விஷாலிடம் கூறிய பிறகு, யுவனிடம் கூறுங்கள் என்றார். பிறகு யுவனிடம் 30 நிமிடம் என்றுதான் கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆனால், ஒன்றரை மணி நேரம் ஆனது. பிறகு விஷால் என்னை அழைத்து, யுவன் கதை ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னார், அந்த பெயரைக் காப்பாற்றுங்கள் என்றார். அது இந்த நிமிடம் வரை என் மனதில் அப்படியே இருக்கிறது. அதை ஓரளவு நிறைவெற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். என்றார்.