
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்து கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். 2019ம் ஆண்டில் தொடங்கப்பட்ட படம் கொரோனா தொற்று காரணமாக தாமதமாகி வந்தது. மேலும் கடந்த 2020ம் ஆண்டு தொற்று காரணமாக பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தது. அதையடுத்து நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டன. ஆரம்பத்தில் பெரிதாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு செல்லாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியானது. அதையடுத்து பெருவாரியான ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள். அந்த வகையில் ஓராண்டுக்குப் பிறகு ரசிகர்களை மாஸ்டர் படம் மூலம் மீண்டும் தியேட்டருக்கு இழுத்தார் விஜய்.
இந்தநிலையில் மாஸ்டர் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து ஒன் இயர் ஆப் மாஸ்டர்- என்று விஜய் ரசிகர்கள் ஹாஷ்டேக் டிரெண்டிங் செய்தனர். அதோடு மாஸ்டர் படத்தை தயாரித்த எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர் நிறுவனமும் மாஸ்டர் படம் கடந்து வந்த பாதை குறித்த ஒரு பயண வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்கள்.