பாலி மற்றும் பௌத்த பல்கலைகழகத்தை தகுதிவாய்ந்த அதிகார சபையாக நியமித்து அதனை “சர்வதேச பௌத்த கற்கை மையமாக” மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவேனா கல்வியின் தரத்தை உயர்த்துவது இன்றியமையாதது என மகாசங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட யோசனை நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை அரசாங்க தலையீட்டுடன் நடத்துமாறு மல்வத்து அஸ்கிரி மகாசங்க உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
அடுத்த ஒன்றரை வருடங்களில் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய, பொருளாதார நிலையை கட்டியெழுப்புவேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக இருந்த அரசாங்கத்தின் வரி வருவாய் 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதனால் இந்த நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் காணப்பட்டது. எங்களது வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எமக்கு தெரிவித்துள்ளது.
நான் ஜனாதிபதியாக பதவியேற்ற போது, நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால் நாங்கள் முதலில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை எட்ட முயற்சித்தோம். அதனால் அன்று மக்கள் எதிர்கொண்ட பல சிரமங்கள் இன்று தவிர்க்கப்பட்டுள்ளன.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை வலுவான நிலைக்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அதன் பின்னர் நாம் அரசியல் செய்வோம். ஆனால் இந்த நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவும் தேவை. இந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை மாதத்திற்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய பொருளாதாரத்தை தயார்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த காலகட்டம் கடினமானதாக இருந்தாலும், அனைவரிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்புடன் பொருளாதார ரீதியில் பலமான நாடாக மாறுவதற்கு இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்..