ரஷ்யாவின் ரெட் விங்ஸின் முதலாவது விமானம் 398 பயணிகளுடன் மத்தளைக்கு

ரஷ்யாவின் ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ், ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு (எம்ஆர்ஐஏ) திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளை வியாழன் (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளன.

முதலில் திட்டமிடப்பட்ட விமானம் 404 ரஷ்ய பயணிகளை ஏற்றிச் செல்லும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்யாவின் ரெட் விங்ஸின் முதலாவது விமானம் 398 பயணிகளுடன் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ் இலங்கைக்கு நேரடி விமான சேவையை வழங்கும் மூன்றாவது ரஷ்ய விமான சேவையாகும் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மற்ற இரண்டு விமான நிறுவனங்கள் அஸூர் ஏர் மற்றும் ஏரோஃப்ளோட் ஆகும்.

டிசம்பர் 26, 2022 அன்று, ரஷ்ய கூட்டமைப்பிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே மற்றும் குழுவினர் ரெட் விங்ஸின் வணிக இயக்குநர் இகோர் ட்ரெட்டியாகோவ் மற்றும் பகுப்பாய்வுத் துறைத் தலைவர் திருமதி மரினா புசினா ஆகியோருடன் இறுதி சம்பிரதாயங்களைப் பற்றி விவாதித்தனர்.

ஆரம்பத்தில் ரெட் விங்ஸ் ரஷ்யாவில் உள்ள முன்னணி சுற்றுலா நிறுவனங்களுடன் இணைந்து வாரத்திற்கு இருமுறை இலங்கைக்கான பட்டய சேவைகளை இயக்கும், அதன் பின்னர் வழக்கமான விமானங்களை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த கடினமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பை இலங்கைக்கு ஒரு முக்கியமான சுற்றுலா போக்குவரத்து ஆதாரமாக கருத முடியும் என்பதால், நாட்டின் சுற்றுலாத்துறையை புத்துயிர் பெற ரெட் விண்ட்ஸ் விமான நடவடிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று தூதரகம் கருதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE