தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பாரிய முன்னேற்றம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பிரதான, தேசியவாத, பிராந்திய மற்றும் இனவாதக் கட்சிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பாரிய முன்னேற்றத்தை எடுத்துள்ளார்.

நல்லிணக்கம் தொடர்பான சர்வகட்சி மாநாட்டை ஜனாதிபதி விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கூட்டினார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புதிதாக உருவாக்கப்பட்ட உத்தர லங்கா சபை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பல குழுக்களின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஜே.வி.பி அல்லது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரியவந்துள்ளது.

இந்த மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முன்னர் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

2023 பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி விக்ரமசிங்க முன்னர் அறிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த மாநாட்டின் போது குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் வசிப்பவர்களை பாதிக்கும் பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துதல், அதிகாரப் பகிர்வு, வடக்கு, கிழக்கு காணிகளை அதன் முன்னைய உரிமையாளர்களுக்கு விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துதல் ஆகிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளும் குழுக்களும் ஆர்வமாகவும் ஆதரவாகவும் இருந்தபோதும், தேசியவாதக் கட்சிகள் அதற்கு ஆதரவாக இருக்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய முன்மொழிவுகள், தேசியப் பிரச்சினையை குறுகிய காலத்துக்குள் தீர்த்து தென்னிலங்கை மக்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என சில குழுக்கள் சந்தேகம் கொண்டிருந்தன.

சகல தரப்பினரும் பங்கு வகிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னேற்றம் காண முடியாவிட்டால் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE