நாட்டிற்கு அதிக வருமானம் தரும் ஆடைத் துறை எதிர்நோக்கும் சவால்களை இனங்கண்டு அவற்றைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆடைத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் அத்துறையில் ஈடுபடுவோரின் தொழில் பாதுகாப்பை பாதித்த பாதகமான விளைவுகளை கண்டறிவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி செயலாளர் இந்த பணிப்புரைகளை வழங்கினர்.
இலங்கையில், ஏற்றுமதி சார்ந்த கைத்தொழில்களில், ஆடைத் துறை முன்னணி இடத்தைப் பெறுவதுடன், அத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவைத் தவிர்த்து, அதனை மேம்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அன்னியச் செலாவணி மற்றும் மூலப்பொருட்கள் தொடர்பான பிரச்சனைகள் இத்துறையின் செயல்பாடுகளை எவ்வாறு பாதித்தன என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நாடு எதிர்நோக்கும் சவாலான வேளையில் ஆடைத் துறையை பாதுகாப்பதாகவும், அதன் முன்னேற்றத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதியளித்தனர்.
இது தொடர்பில் உடனடி தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், வழமையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தேவையான தீர்மானங்களை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.