பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்தால் அடுத்த நடக்க வேண்டிய திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன. இதனை ‘ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்று குறிப்பிடுகின்றனர்.
1960கள் முதலே இந்தத் திட்டம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. எலிசபெத் மகாராணி உயிரிழக்கும் போது, அங்கு 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். எலிசபத் மகாராணி உயிரிழக்கும் போது, அது முதலில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும். அதன் பின் அவரது தனிப்பட்ட செயலாளருக்குத் தெரிவிக்கப்படும். அவர் பாதுகாப்பான தொலைப்பேசி இணைப்பில் பிரதமரைத் தொடர்பு கொண்டு, ‘லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்’ என்ற வாக்கியத்தை கூறுவார். அதன் பின்னர் அமைச்சரவை செயலாளர் மூலம் மற்ற அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு இந்த செய்தி பகிரப்படும்.
பிபிசி டிவி மற்றும் ரேடியோ மூலம் எலிசபெத் மரணம் குறித்து செய்தி பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அனைத்து பிபிசி ஊடகங்களிலும் பிற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, எலிசபெத் மகாராணி இறுதிச்சடங்கு குறித்த நேரலை செய்யப்படும். பார்லிமென்டில் எம்.பி.க்கள் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
10ஆம் நாளில் இறுதிச்சடங்கு
ராணியின் உடல் அரசு ரயில் அல்லது ராயல் ஏர்போர்ஸ் மூலம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து வரப்படும்.10ஆம் நாளில் இறுதிச்சடங்கு நடக்கும். எலிசபெத்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் இரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும். இது தவிர அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன், பார்லிமென்ட் நடந்து கொண்டு இருந்தால் அதுவும் ரத்து செய்யப்படும்.