இராணுவ ஆட்சி- பாதுகாப்பு செயலாளர்!

இலங்கையில் இராணுவ ஆட்சியை அமைப்பது சிரமமான விடயமாகும். அதேபோல் இராணுவ ஆட்சியை உருவாக்கும் மனோநிலையில் நாமும் இல்லை. எனவே இலங்கையால் இராணுவ ஆட்சி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டியதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறைகள் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்தே அவசரகால நிலைமையின் கீழான மற்றும் ஊரடங்கு சட்டத்தின் கீழான முழுமையான அதிகாரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இராணுவ ஆட்சியை உருவாக்குவதற்கான எந்தவொரு திட்டமும் தற்போதைய இராணுவத் தளபதியின் கீழுள்ள இராணுவத்தினருக்கு இல்லை. இராணுவ ஆட்சியை உருவாக்கும் மனோநிலை எமது இராணுவத்தினருக்கும் இல்லை. நாட்டில் வன்முறைகள் இடம்பெறும்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் களமிறக்கப்படுவார்கள்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னர் அடுத்த 48 மணித்தியாலங்கள் இலங்கை லிபியாவாக மாறியிருந்தது. பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இவ்வாறான நிலையில் இந்தியாவின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியின் சுவாமி ‘‘எமது அண்டை நாடான இலங்கை லிபியாவாக மாறுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

எனவே இலங்கைக்கு உதவ இந்திய இராணுவம் அனுப்பப்பட வேண்டும் என கூறியிருந்தார். நாட்டின் எதிர்காலத்துக்கு உதவியவர்களை வீதிகளில் அடித்து சென்றிருந்தனர். அதுபோல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் பலர் தாக்கப்பட்டு இரத்தம் வடிந்ததைக் காணும்போது பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை விட பல மடங்கு வன்மமான நிலைமையை உணர்ந்தேன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிசிடிவி வீடியோக் காட்சிகளை அடிப்படையாக கொண்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்து நீதிமன்றத்தின் முன்நிறுத்துவோம். ஜனாதிபதி செயலகம் முன்பாக வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பிக்கப்பட்டப் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்ப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், ஊரடங்குச் சட்டத்தை பொருட்படுத்தாது அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களின் வீடுகள், சொத்துக்கள் கொளுத்தப்பட்டன. இதனை நாம் அனுமதிக்க முடியாது. 135 வீடுகள் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அரச, பொலிஸ் வாகனங்கள் உள்ளிட்ட 61 வாகனங்களுக்கு பகுதியளவில் சேதமும், 45 வாகனங்கள் முற்றாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறைகள் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்தே அவசரகால நிலைமையின் கீழான மற்றும் ஊரடங்கு சட்டத்தின் கீழான முழுமையான அதிகாரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஒரு சிலர் வன்முறையை கையில் எடுத்து நாட்டை நாசமாக்குவதையும், பாதுகாப்பு படைகள் செய்ய வேண்டிய கடமையை ஒரு சிலர் முன்னெடுப்பதையும் எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவேதான் 48 மணிநேரம் பொறுமையாக இதனை கால முயட்சித்து முடியாத கட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் வரையில் நடத்த தீர்மானம் எடுத்தோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE