சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகள் கொரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறிய நிலையில், தீவிர ஊரடங்கு விதிகளால் சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தற்போது சீனாவுக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். சீனாவில் தினசரி தொற்று 13 ஆயிரத்தை கடந்து பதிவாகும் நிலையில், ஷாங்காய் நகரில் மட்டும் தினந்தோறும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.
அங்கு நிலைமை மோசமடைந்து வருவதால், சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஷாங்காய் நகருக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சுகாதார பணியாளர்களுக்கு உதவ, ராணுவ வீரர்களும் அங்கு சென்றுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கவும், தொற்று பரிசோதனைகளை துரித ரீதியில் மேற்கொள்ளவும் சீன அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஷாங்காயில் விதிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கு விதிகளின்படி, மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் குப்பைகளை அகற்ற, நடைப்பயிற்சி மேற்கொள்ள என எந்த காரணத்திற்காகவும் மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.