சரணடையும் பேச்சுக்கே இடமில்லை – உக்ரைன் பதில்

‘ஆயுதங்களை ஒப்படைத்து, சரணடைந்து விடுங்கள். இல்லாவிட்டால் பேரழிவுக்கு தயாராக இருங்கள். மக்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்’ என்று மரியுபோல் நகரை முற்றுகையிட்டுள்ள ரஷ்ய ராணுவம் விடுத்துள்ள மிரட்டலுக்கு அஞ்சாமல் உக்ரைன் ராணுவ வீரர்களும் எதிர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

‘சரணடையும் பேச்சுக்கே இடமில்லை’ என்று உக்ரைனின் துணை பிரதமர் ஐரைனா வெரஷ்சுக்கும் கூறியுள்ளார். உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில் உள்ள மரியுபோல், அந்நாட்டின் பெரிய துறைமுக நகரம். உக்ரைனுக்கு வெளியில் இருந்து ஏதும் உதவிகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தலைநகர் கீவ்வுக்கு அடுத்தபடியாக மரியுபோலை குறி வைத்து, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ரஷ்ய படைகள் சரமாரியாக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன.

மரியுபோலில் உள்ள பள்ளி, தியேட்டர், தேவாலயம் மற்றும் மருத்துவமனை என எதையும் விட்டு வைக்காமல் ராக்கெட் ஏவுகணைகளை வீசி, ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த தாக்குதலால் மரியுபோல் நகரம் தரைமட்டமாகி வருகிறது. மின்சப்ளை இல்லை. குடிநீர் இல்லை. உணவுப்பொருட்களும் மிகமிக குறைந்த அளவே உள்ளன. ஆனாலும் மரியுபோலில் உள்ள 4 லட்சம் மக்களும் வருவது வரட்டும் என்று தைரியமாக உள்ளனர்.

அங்குள்ள உக்ரைன் ராணுவ வீரர்களும், சளைக்காமல் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர். உக்ரைனின் இந்த தாக்குதலில் ரஷ்ய கடற்படையின் முக்கிய அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் ரஷ்ய படைகள் ஆவேசமடைந்து, தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தொடர்ந்து நேற்றும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ‘உணவு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதால், ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்து விடுங்கள்.

மரியுபோல் நகரையும் ஒப்படைக்க வேண்டும். சரணடைய மறுத்தால் பேரழிவுக்கு தயாராக இருங்கள்’ என்று ரஷ்ய ராணுவத்தின் உயரதிகாரிகள் நேற்று இரவு மரியுபோலில் உள்ள உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் அனுப்பினர். ‘சரணடையும் பேச்சுக்கே இடமில்லை. ரஷ்யா தனது தவறுகளை உணர்ந்து திருந்த வேண்டும். மரியுபோலில் உள்ள ராணுவ வீரர்கள், இறுதி வரை போராடுவார்கள்’ என்று உக்ரைனின் துணை பிரதமர் ஐரைனா வெரஷ்சுக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE