பிரதமரின் அமைப்பாளரான கீதநாத் காசிலிங்கம் அரசியல் பழகுவதற்கு ஆர்வமாக இருந்தால் மக்களை குழப்பாமல் அரசியல் பழங்குமாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்தார்.
நேற்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.- பிரதமர் இணைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமரின் பிரதிநிதியாக கலந்து கொள்வதற்கான கடிதம் எனக்கு கிடைத்தது.
அதனை நான் வரவேற்கிறேன். ஏனெனில் இயன்றவரை மக்கள் பிரச்சனை தீர்ப்பதற்காகவே மக்களிடம் ஆணை பெற்றோம். அதனை விரைவு படுத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
ஆனால் சில ஊடகங்களில் கீதநாத் தெரிவித்ததாக சில விடயங்கள் மிகைப்படுத்தி செய்திகளாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஏனெனில் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் செயற்பாடுகளை பிரதமர் அலுவலகம் கட்டுப்படுத்தப்போகிறது என்ற தோரணையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன். அவர்கள் இந்த செய்தியை குறித்த நபர்தான் தெரிவித்ததாக கூறினார்கள்.
குறித்த நபர் ஏற்கனவே விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் முகநூலை ஒத்த முகப்பு புத்தகத்தில் சில விடயங்களை தவறாக பதிவேற்றம் செய்தவர்.
கீதநாத் காசிலிங்கம் பற்றி பலர் அறிந்திருப்பார்கள் நான் அதனை விரிவாக பேச விரும்பவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் நாமல் ராஜபக்சவின் இணைப்பாளராக கடமையாற்றிய நிலையில் நாமல் ராஜபக்சவின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தார்.
அவர் ஏன் பதவி நீக்கப்பட்டார் என்ன செய்தார். என்பதை அவரிடமே கேளுங்கள்.நான் மக்கள் கூட்டத்தை இன்று நேற்று கண்டவன் அல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபடியான தமிழ் வாக்குகளால் வென்றவன்.
சிலர் அரசியலுக்கு ஆசைப்பட்டு சில ஊடகங்களை பயன்படுத்தி எனது மக்கள் செல்வாக்கை குறைத்து விடலாம் என தப்பு கணக்கு போட்டுள்ளனர்.
அண்மையில் கரவெட்டியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டில் அணி திரண்ட மக்கள் கூட்டத்தைப் பார்த்து அரசியல்வாதிகள் சிலருக்கு பயம் ஏற்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் தமது சுயலாப அரசியலை செய்ததன் விளைவே சிலர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அவ்வாறானவர்கள் அரசியல் பழக விரும்பும் கீதநாத் போன்றவர்களை வைத்து எனது அரசியலை தடுத்துவிடலாம் என தப்புக்கணக்கு போடுகின்றனர்.
நான் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் மத்தியில் வந்தவன் மக்களின் ஜனநாயக வாக்குகளால் யாழ் தேர்தல் தொகுதியில் தேசியக்கட்சியில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவன்.
ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி மக்களின் ஆணையுடன் தொடர்ந்தும் பயணிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.