இம்முறை எரிபொருள் விலைகளை அதிகரித்தால், அது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பாக இருக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இப்படியான விலை அதிகரிப்பை கோரியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உலக சந்தையில் எரிபொருளின் விலை வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதனால், ஏற்பட்டுள்ள நிலைமை சம்பந்தமாக நிதியமைச்சு விளக்கியுள்ள போதிலும் இதுவரை எரிசக்தி அமைச்சின் பதில் கிடைக்கவில்லை எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
நாளுக்கு நாள் நஷ்டமடையும் நிறுவனமாக தொடர்ந்தும் இயங்க முடியாது என்பதால், மிகப் பெரிய அளவில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
ஒரு லீற்றர் பெட்ரோலின் விலையை 192 ரூபாய் வரையும் டீசலின் விலையை 169 ரூபாய் வரையும் கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என கூட்டுத்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் இம்முறை எரிபொருள் விலைகளை அதிகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றால், பொது போக்குவரத்து, முப்படைகள், பொலிஸ் உட்பட அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பது என தீர்மானிக்க நேரிடும் எனவும் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.