கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் வலுவடைந்துள்ளதால், கனடா தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா வைரசால், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலி எண்ணிக்கை 35ஆயிரத்தை நெருங்குகிறது.இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லாரி டிரைவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு, ‘டோஸ்’களை செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தாத டிரைவர்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் ஒட்டாவாவிலும், போராட்டங்கள்தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக, ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ஒட்டாவா மேயர் ஜிம் வாட்சன் நேற்று வெளியிட்டார்.