திரையுலகில் ஒன்றாக சேர்ந்து நடித்த எத்தனையோ ஜோடிகள் காதலில் விழுந்து, கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். சிலர் சில பல தனிப்பட்ட காரணங்களால் பிரிந்தும் உள்ளனர். தென்னிந்திய சினிமாவில் அருமையான காதல் ஜோடி என கொண்டாடப்பட்டவர்கள் சமந்தா, நாகசைதன்யா.
இருவரும் இணைந்து நடித்த முதல் படமே உருகி உருகி காதலிக்கும் முதல் படமாக அமைந்தது. அப்போதே அவர்கள் காதலில் விழுந்ததாகவும் கிசுகிசு பரவியது. சில வருடங்களுக்குப் பின்னர் தங்களது காதலைப் பற்றி அறிவித்து அடுத்து திருமணமும் செய்து கொண்டார்கள். அவர்களின் நான்கு வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வரும் என அவர்களது ரசிகர்கள் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
கடந்த வருடம் அக்டோபர் 2ம் தேதி இருவருமே ஒரு சேர தங்களது பிரிவைப் பற்றி அறிவித்தார்கள். ஆனால், அதற்கும் முன்பு அவர்கள் மனதால் பிரிந்துவிட்டார்கள் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இருவரும் மீண்டும் இணையலாம் என்று சில ஊடங்களில் செய்திகள் வெளிவந்தது. சமந்தா தங்களது பிரிவு பற்றி அறிவிப்புப் பதிவை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கியதே அதற்குக் காரணம்.
ஆனால், இருவரும் மீண்டும் சேரும் பேச்சுக்கே இடமில்லை என ஐதராபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் சட்டப்பூர்வமாக பிரிவதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். அவை முடிந்ததும் இது போன்ற தகவல்கள் பரவ வாய்ப்பில்லை என்கிறார்கள். மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் இருந்திருந்தால் ‘புஷ்பா’ படத்தில் அப்படி ஒரு கவர்ச்சி நடனமாடியிருக்க மாட்டார் சமந்தா என்றும் சொல்கிறார்கள்.