இனப்பிரச்சினை தீர்வுக்காக நேர்மையாக செயற்படுகின்ற எந்த நாட்டுடனும் நாங்கள் பயணிப்போம்-கஜேந்திரகுமார்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்காக நேர்மையாக செயற்படுகின்ற எந்த நாட்டுடனும் நாங்கள் பயணிப்போம். அதற்காக இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13 திருத்தத்தை தீர்வாக நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை தமிழர்கள்தான் கூறமுடியும் அதனை எவரும் கூற முடியாது ,திணிக்கவும் முடியாது 13 ஆவது திருத்தத்தை தீர்வாக ஒருபோதும் ஏற்க முடியாது.

நாம் அதில் தெளிவாகவுள்ளோம். 13ம் திருத்தத்தை தமிழ் மக்களை ஏற்று கொள்ளவைப்பது தமிழர்களுடைய அபிலாசைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழர் தேசத்தை அழிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகத்தான் நாம் அதனை பார்க்கின்றோம். இதற்கு நாம் ஒருபோதும் ஒத்துழைக்கபோவதில்லை் நாங்கள் இதனை எதிர்ப்பதை இந்தியா தமக்கு எதிராக பார்க்கிறது என்றால் அது இந்தியாவின் முடிவு.

ஆனால் எங்கள் மக்களுடைய நலன்கள் எவருக்கும் நாங்கள் பேரம்பேசி கைவிடத் தயாரில்லை . தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்காக நேர்மையாக செயற்படுகின்ற எந்த நாட்டுடனும் நாங்கள் பயணிக்க மாட்டோம் என கூறவில்லை. மாறாக அனைவரையும் கேட்டுக்கொள்வது தமிழர்களுடைய அடிப்படை அபிலாசைகள் குறிப்பாக திம்பு கோட்பாடுகளில் கூறப்பட்ட அடிப்படை அபிலாசைகள் முழுமையாக பூர்த்தி செய்யக கூடிய வகையிலே அவர்களுடைய ஆதரவை எமக்கு தரவேண்டும் என்ற அடிப்படயில்தான் நாம் கோரிவருகின்றோம்.

இதனை தமிழ்தேசிய மக்கள் முன்னணியாக நாம் அனைவருக்குமே எங்களுடைய தீர்வு யோசனைகளை வழங்கியிருக்கிறோம். மக்கள் பேரவையால் அங்கிகரிக்கப்பட்ட தமிழ் தேசம் அங்கிகரிக்கப்பட்ட தமிழ்தேசத்தின் இறைமை அங்கிகரிக்கப்பட்ட ,தமிழ்தேசம் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை முழுமையாக அங்கிகரிக்கப்பட கூடிய சமஸ்டி தீர்வைத்தான் நாங்கள் கோரியிருக்கின்றோம். இதை நோக்கியதாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதேவேளை சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்து கூறுவதற்கு அவர்கள் தயார் என்றால் அவர்களை அரவணைத்து அவர்களுடன் பயணிப்போம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இந்தியாவுடன் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியா 13 ஆவது திருத்தத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை ஏன் என்றால் அது வல்லரசு. தன்னுடைய தேவைக்காக அதனை கூறுகிறது. இங்கு யார் பிழை என்றால் தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்று தமிழ் மக்களுடைய நலன்களுக்காக குரல்கொடுக்காமல் இந்தியாவினுடைய எடுபிடிகளாக இருக்கூடிய துரோகிகள் தான் பிரச்சினை.

ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றோம் சமஸ்டிதான் தேவை என மக்களிடம் ஆணை பெற்று அதற்கு நேர் எதிராக 34 வருடத்திற்கு முன்பாகவே எடுத்து எடுப்பிலே நிராகரித்த 13 ஆவது திருத்தத்தை இன்று நடைமுறப்படுத்த கேட்பது என்றால் அந்த துரோகிகளுக்கு எதிராக செயற்படுவோம்.

நாங்கள் எந்த நாட்டையும் எதிரியாக பார்க்க தயாரில்லை இந்தியா கேட்கும் போது இந்தியாவின் பக்கத்தில் நியாயம் இருக்கும். ஆனால் ஒற்றையாட்சியாக இருக்கும் 13 திருத்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.

மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது,

நாம் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது 13ஐ கோரும் தரப்புக்களிற்கே பிரச்சனையாக இருக்கும். நாம் மாகாணசபையை கைப்பற்றி, அந்த வெற்றுக்கோசத்தை அம்பலப்படுத்தி விடுவோம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் கட்டாயம் நாம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

கடந்தமுறை இராயப்பு யோசெப் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில், மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று, இதிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தி, இதை தாண்டி அரசியலை கொண்டு செல்ல செயற்படுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வாக்குறுதியளித்தனர். மக்களை பகிஸ்கரிக்க அழைப்பு விட வேண்டாமென்றார்கள். அதை நம்பினோம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.

ஒரு அதிகாரமுமில்லாத ஒன்றை தமிழ் மக்களிடம் திணித்து, வரப்போகிற அரசிலமைப்பில் 13வது திருத்தம் உள்ளதாக கூறி மக்களை ஆதரிக்க வைக்கும் முயற்சியை முறியடிக்க நாம் போட்டியிட வேண்டும்.

நாம் 13ஆம் திருத்தத்தை நிராகரிக்கிறோம். எமக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. கடந்த தேர்தலை எமது கட்சி பகிஸ்கரித்தது. ஆனால் மக்களை பகிஸ்கரிக்க கோரவில்லை. மாகாணசபை முறைமையின் அதிகாரமற்ற தன்மையை அம்பலப்படுத்தாமல், அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கூட்டமைப்பு சென்றுள்ளதால், மாகாணசபை முறையை அம்பலப்படுத்தும் பொறுப்பை நாமே ஏற்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE