இலங்கையில் குறைந்தது 60% குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் எனவும் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையே இதற்கான முக்கிய காரணமெனவும் ஸ்ரீலங்கா சமசமாஜ கட்சியின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ஆண்டு சராசரியாக 5% முதல் 6% வரை மட்டுமே உயரும் பொருட்களின் விலைகள், கடந்த மாதத்திற்குள் குறைந்தபட்சம் 14% வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவுகூட வாங்க முடியாத நிலையேற்பட்டுள்ளதுடன், இன்று மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை பசி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிய அவர், சில குடும்பங்கள் சிரமத்துடன் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உண்ண முடிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு இடையே, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, தேவையற்ற அபிவிருத்திகளை ஒத்திவைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.