சுவிஸ் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் லண்டனில் உள்ள சொகுசு பங்களாவை விட்டு வெளியேறும்படி விஜய் மல்லையாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் வரை கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, கடந்த 2016ல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே லண்டனில் ரிஜின் பார்க் நகரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை சுவிஸ் வங்கியில் அடமானம் வைத்து விஜய் மல்லையா 185 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தார். ஒப்பந்தப்படி 5 ஆண்டுகளுக்குள் மல்லையா கடனை திருப்பிச் செலுத்தாததால் சுவிஸ் வங்கி நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் 2017ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றம், லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து விஜய் மல்லையாவை சொகுசு பங்களாவில் இருந்து வெளியேற்ற மீண்டும் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விஜய் மல்லையா பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பங்களாவை சுவிஸ் வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.