புல்மோட்டை வலத்தாமலை சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

 

திருகோணமலை – புல்மோட்டை வலத்தாமலை சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த சின்னவன் என்றழைக்கப்படும் ஜெமீல் நிஸ்வர் (21வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த பிரதேசத்தில் உள்ள சேற்றில் சடலமொன்று காணப்படுவதாக வயலுக்குச் சென்ற காவலாளியொருவர் குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சடலத்தை பார்வையிடுவதற்காக திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.சாஹிர் சம்பவ இடத்துக்கு சென்றதுடன் குறித்த சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனையை முன்னெடுக்குமாறு கட்டளையிட்டார்.

தனது கணவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாக பொலிசார் கைது செய்வதற்கு வீட்டுக்கு வந்ததாகவும் இதேவேளை அவர் தப்பி ஓடியதாகவும் இதனையடுத்து நானும் கணவரும் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தபோது யான் ஓயா பாலத்தை அண்மித்த பகுதியில் பஸ்ஸை மறைத்து தனது கணவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டதாகவும் இதனையடுத்து கணவர் தப்பி ஓடியதாகவும் நீதவான் முன்னிலையில் மனைவி தெரிவித்தார்.

அத்துடன் தன்னை வாகனத்தில் ஏற்றிச் சென்று திரியாய் சந்தியில் வைத்தியசாலைக்கு அருகில் இறக்கிவிட்டு கணவர் வீட்டுக்கு வருவார் என பொலிசார் கூறியதாகவும், இதேவேளை தனக்கு அருகில் நின்ற பொலிசாரின் உடையில் சேறு இருந்ததாகவும் இதனால் தனது கணவரை பொலிஸார் துரத்தி சென்றமையினாலேயே சேற்றில் சிக்குண்டு உயிரிழநதிருக்கலாம் எனவும் மனைவி நீதிவான் முன்னிலையில் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அத்துடன் குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நீதவான் உத்தரவிட்டதுடன் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தினால் விசாரணைகளை முன்னெடுக்குமாறு திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE