கனடாவின் உண்டுறை பள்ளிகள் அருகில் நூற்றுக்கணக்கான பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் கனடாவையே உலுக்கியது. அந்த சின்னஞ்சிறார்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு, அவர்களது கலாச்சாரமும் மொழியும் பறிக்கப்பட்டு, கொடுமைகளுக்காளாகி உயிரிழந்தவர்கள்.
அவர்கள் உயிரிழந்த செய்தி கூட அவர்களது பெற்றோருக்குக் கூறப்படாமல், ஆளுக்கொரு பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை என்ற ஒரு அடிப்படை அடையாளம் கூட இல்லாமல், பள்ளிகளுக்கு அருகிலேயே புதைக்கப்பட்டிருந்தார்கள் அந்த பிள்ளைகள்.
இப்படி பல நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் உடல்கள் சுமார் 1,1000 உண்டுறை பள்ளிகளின் அருகில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்க, மக்கள் ஆத்திரத்துக்குள்ளானார்கள்.
அந்த பள்ளிகள் கத்தோலிக்க சபைகளில் பொறுப்பின் கீழ் இருந்தவை என்பதால், மக்களின் கோபம் கத்தோலிக்க தேவாலயங்கள் பக்கம் திரும்பியது. சில இடங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்நிலையில், பூர்வக்குடியின தலைவர்களில் ஒருவரான RoseAnne Archibald, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் கனடாவுக்கு வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதேபோல், கனேடிய அரசியல்வாதிகளும், திருச்சபை மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது, பூர்வக்குடியினரில் தற்போது வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், பள்ளி ஆவணங்களை வெளியிடவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், போப் பிரான்சிஸ் கனடாவுக்கு வருகை புரிய இருக்கிறார்.
அவர் கனடா வரும் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
பல முறை கனேடியர்கள் போப்பாண்டவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்று வலியுறுத்திய நிலையிலும், அவர் இதுவரை மன்னிப்புக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.