ஆல்பர்ட்டாவின் எட்மண்டன் நகர புதிய மேயராக இந்திய வம்சாவளி அமர்ஜீத் சோஹி (Amarjeet Sohi) தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எட்மண்டன் நகர மேயராக தெரிவு செய்யப்பட்ட முதல் ஆசிய நாட்டவராக சோஹி வரலாறு படைத்துள்ளார். தமது வெற்றி, இந்த சமூகத்தின் வெற்றியாகவும், இந்த வெற்றியால் இனி எஞ்சிய சமூக மக்களும் உயரிய பொறுப்புக்கு முன்வர நம்பிக்கை பிறக்கும் என தமது உரையில் குறிப்பிட்டுள்ளார் சோஹி.
சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் வேறுபட்ட பின்னணியில் இருந்து வரும் மக்கள் என அனைவரும் நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கு வர தடையாக இருக்கும் அனைத்து விதிகளையும் திருத்த வேண்டும் எனவும், அதுவே புதிய மாறுதலை சமூகத்தில் ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் சோஹி.
எட்மண்டன் மக்களுக்கு நன்கு அறிமுகமான சோஹி பலமுறை நகராட்சி மற்றும் பெடரல் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். 2007ல் தென்கிழக்கு எட்மண்டனில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எட்டு ஆண்டுகள் நகர சபையில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.2015ல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான சோஹி, 2018 வரையில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நல அமைச்சராக பணியாற்றினார். தற்போது எட்மண்டன் மேயர் தேர்தலில் பதிவான 89 சதவீத வாக்குகளில் 45 சதவீதம் சோஹி கைப்பற்றியதாக தெரிய வந்துள்ளது.
1981ல் குடும்பத்துடன் இந்தியாவில் இருந்து கனடாவின் எட்மண்டன் நகருக்கு புலம்பெயர்ந்த சோஹி, போனி டூன் உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். பின்னாளில் எட்மண்டன் நகரில் பேருந்து சாரதியாகவும் பணியாற்றியுள்ளார்.