கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழலை உருவாக்க வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை முன்னெடுத்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா ஏவுகணை சோதனை முன்னெடுத்துள்ளதை அண்டை நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்துள்ளன. பாலிஸ்டிக் வகை ஏவுகணையை வடகொரியா சோதனை மேற்கொண்டதாகவே தெரிய வந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி பகல் 10.17 மணியளவில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டதாக தென் கொரிய கூட்டுப்படைகள் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிவிக்கையில், வட கொரியாவிடம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவாறு ஏவுகணையை ஏவும் வசதி இருக்கிறது.
வட கொரியா அதனைப் பயன்படுத்தியே தற்போது ஏவுகணையை சோதனை செய்துள்ளது. நாங்கள், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை கூர்ந்து கவனித்துள்ளோம் என்றார்.கொரிய போர் முடிவுக்கு வந்தாலும் கூட இன்னமும் இருநாடுகளுக்கும் இடையே சுமுகமான போக்கு ஏற்படாததால், தென் கொரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பலமுறை அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு இத்தகைய ஏவுகணை சோதனைகள் முட்டுக்கட்டையாக அமையும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே ஜப்பானின் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இது குறித்து தெரிவிக்கையில்,
வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. வட கொரியா சமீப காலமாகவே அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்து வருவது கொரியா தீபகற்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.