ஒன்ராறியோ மாகாண இளையோர்களுக்கு இனி பைசர் தடுப்பூசி அளித்தால் போதும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பு பரிந்துரைத்துள்ளது.
மாடர்னா தடுப்பூசியால் இளையோர்களுக்கு இருதய பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையிலேயே ஒன்ராறியோ நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் புதன்கிழமை முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட அதிகாரிகள் தரப்பு, மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட இளையோர்களில் பெரும்பாலானவர்களுக்கு இருதய பாதிப்பு கண்டறியப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதில் பெண்களை விடவும் ஆண்களில் அதிகமாக இருதய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 5,000 ஆண்களில் ஒருவருக்கு மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட பிறகு இருதய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பைசர் தடுப்பூசி போட்டுகோண்ட ஆண்களில் 28,000 பேர்களில் ஒருவருக்கே குறித்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 17,000 பெண்களில் ஒருவருக்கே இருதய பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்தே, ஒன்ராறியோவில் மாடர்னா தடுப்பூசி இளையோர்களுக்கு அளிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இருப்பினும் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளையோர்களுக்கு அவர்களின் ஒப்புதலுடன் மாடர்னா தடுப்பூசி அளிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், பொதுவாக இனிமுதல் குறித்த வயதுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசி மட்டுமே அளிக்கப்படும் எனவும் மாடர்னா தடுப்பூசி போடப்படாது எனவும் உறுதி செய்துள்ளனர்.
மேலும், இளையோர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், குறித்த தடுப்பூசி மீது அச்சம் கொள்ளத் தேவை இல்லை எனவும், மாடர்னா தடுப்பூசி பாதுகாப்பான சிறந்த தயாரிப்பு எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.