போலீசுக்கு போன் அடித்த குட்டி குரங்கு

அமெரிக்காவில் ஒரு குரங்கு குட்டி, காவல் துறையின் அவசர எண்ணுக்கு மொபைல் போனில் இருந்து அழைப்பு விடுத்த சம்பவம், சுவாரசியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வனவிலங்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கிருந்து, போலீசாரின் அவசர உதவி எண்ணான 911க்கு, 13ம் திகதி மொபைல் போனில் இருந்து அழைப்பு சென்றுள்ளது. ஆனால், உரையாடலுக்கு முன்னரே அழைப்பு துண்டிக்கப்பட்டது. போலீசார் போன் அழைப்பை சோதனை செய்ததில், அது பாஸா ரோபில்ஸில் உள்ள வனவிலங்கு பூங்கா ஒன்றிலிருந்து வந்ததை கண்டறிந்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால், இங்கிருந்து ‘யாரும் போன் செய்யவில்லை’ என ஊழியர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, யாரேனும் குறும்புக்காக போன் செய்தனரா என போன் எண்ணை ‘டிராக்’ செய்தபோது, அங்குள்ள ‘ரூட்’ எனப் பெயரிடப்பட்ட குட்டி குரங்கு ஒன்றின் கையில் மொபைல் போன் இருந்தது தெரிய வந்தது.அங்கிருந்த வாகனம் ஒன்றில், கேட்பாரற்று கிடந்த மொபைல் போனை எடுத்த குரங்கு, 911 எண்ணை தெரியாமல் அழுத்தியுள்ளது.

இதையடுத்து, அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்பதையறிந்த போலீசார் நிம்மதியுடன் திரும்பினர்.’கபுச்சின் வகையைச் சார்ந்த இந்த குரங்குகள், எல்லாவற்றிலும் மிகவும் ஆர்வம் கொண்டவை. கையில் ஒரு பொருள் கிடைத்தால், அதில் என்ன இருக்கிறது, என்ன செய்யலாம் என யோசிப்பவை. மேலும், மிகுந்த சுட்டித்தனம் கொண்டவை’ என, வனவிலங்கு பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE