சீன அதிபருடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தை…!

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா கீரியும், பாம்பையும் போல சண்டையிட்டு வருகிறது.

முன்னேப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது.

வர்த்தகம், கொரோனா வைரஸ் விவகாரம், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், ஹாங்காங் மற்றும் தைவான் மீதான ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.

எனினும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மோசமடைந்த உறவுகளை மேம்படுத்த ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகத்துக்கு சீனா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்கா-சீனா உறவுகள் குறித்த தேசிய கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது.

அப்போது சீன அதிபர் ஜின்பிங் எழுதிய கடிதத்தை அமெரிக்காவுக்கான சீன தூதர் குயின் காங் வாசித்தார். அந்த கடிதத்தில் ஜின்பிங் “அமெரிக்காவுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய சீனா தயாராக உள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று காணொலி காட்சி மூலம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இரு தரப்பு உறவுகள் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் தீவிரமாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, ஜோ பைடன் மனித உரிமைகள் மீதான நடவடிக்கைகளுக்கு நேர்மையாக செயல்படுவதை உறுதி செய்துள்ளதாகவும், அமெரிக்க-சீனா பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது சீன அதிபர் ஜின்பிங் ‘பழைய நண்பருக்கு’ வாழ்த்துக்கள் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் சூழலில் இருநாட்டு தலைவர்கள் இடையே சந்திப்பு நடைபெறுவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE