துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் – அமெரிக்க அதிபர் கையெழுத்து

துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு பெரிய அளவில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. சமீப காலமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில், துவக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 19 குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.அதேபோல் நியூடவுன், கனெக்டிகட், புளோரிடா என பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் பலர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விவாதம் துவங்கியது.இது தொடர்பான மசோதா அந்த நாட்டு பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதாவை சட்டமாக்கும் அரசாணையில் அதிபர் ஜோ பைடன் நேற்று கையெழுத்திட்டார்.”துப்பாக்கிச் சூடுகளில் உயிரிழந்தோரின் குடும்பத்தார், ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். அதை நாம் நிறைவேற்றியுள்ளோம். இந்த சட்டத்தின் மூலம் பல உயிர்களை நாம் காப்பாற்ற முடியும்,” என, ஜோ பைடன் குறிப்பிட்டார்.மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாதபோதும், இந்த சட்டத்தின்படி, பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வயதில் குறைந்தவர்களுக்கு துப்பாக்கிகளை விற்பதற்கு முன், அவர்களுடைய பின்புலத்தை விசாரிக்க வேண்டும்.

குடும்ப வன்முறையில் ஈடுபட்டோருக்கு துப்பாக்கி விற்கக் கூடாது. ஆபத்தானவர்கள் என்று கருதுவோருக்கு துப்பாக்கி விற்பனையை தடை செய்யும் சட்டங்களை அந்தந்த மாகாணங்கள் நிறைவேற்றிக் கொள்ள இந்த சட்டம் அனுமதி அளிக்கிறது.மேலும், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு மனரீதியிலான சிகிச்சை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது

.இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தார் மற்றும் எம்.பி.,க்களுடனான சந்திப்பு கூட்டத்தை, ஜூலை 11ல் நடத்த உள்ளதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE