இலங்கையிலிருந்து வெளியேற முயன்ற 91 பேர் கைது

புத்தளம் – மாரவில பிரதேசத்திலும் மேற்கு கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, கடல் மார்க்கமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 91 பேரை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவின் குழுவொன்று மாரவில பொலிஸாருடன் இணைந்து நேற்று காலை மாரவில பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.

அதன்போது, கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 ஆண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர் என 9 முதல் 58 வயதுக்குட்பட்ட 15 ஆண்கள் அப்பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து நிலையில் கடற்படையின் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.

அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிய வேன் ஒன்றையும் கார் ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் கடற்கரையில் நேற்று பிற்பகல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை கட்டளைப்பிரிவின் குழுவினர் சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதன்போது, 58 ஆண்கள், 5 பெண்கள், 6 குழந்தைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் என ஒன்று முதல் 62 வயதுக்குட்பட்ட 76 பேர் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், பல நாள் மீன்பிடிக் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாரவிலவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிலாபம் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மாரவில, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகவும் மிகவும் ஆபத்தான வகையிலும் நாட்டிலிருந்து வெளியேற்ற முயலும் ஆட்கடத்தல்காரர்களுக்கு இரையாகி தமது உயிர்களையும் உடமைகளையும் பணயம் வைப்பதைத் தவிர்க்குமாறும் கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.

மேலும், இதற்காக பயன்படுத்தப்படும் படகுகள் காலாவதியான மீன்பிடி படகுகள் எனவும், அவற்றின் ஊடாக சட்டவிரோதமாக குடிபெயர முற்படுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE