சாந்தபுரம் கிராமம் யாருக்கு சொந்தம்? வெடித்தது சர்ச்சை

கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற தகவல்களால் சாந்தபுரம் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சுமார் 32 வருடங்ஙகளாக கிளிநொச்சி நிர்வாக சேவை பரப்பிற்கு உட்பட்டு நிர்வாகம் கல்வி சுகாதாரம் போக்குவரத்து சமூக சேவைகள் அனைத்தும் கிளிநொச்சி நிர்வாகங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் புதிய எல்லை மறுசீரமைப்பின் போது குறித்த கிராமம் முல்லைத்தீவு எல்லைக்குள் கொண்டு செல்லப்படும் என்று சில அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மக்கள் மிகுந்த பதற்றம் அடைந்து காணப்பட்டனர். குறித்த குழப்பங்களை இனங்கண்டு தீர்வு காண வழிகாட்டும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை மக்கள் அழைத்து கலந்துரையாடினர்.

இதன் போது குறித்த அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்தி எல்லை மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அரச அதிபர் ஊடாக அனுப்பி வைப்பதற்கும் நாடாளுமன்றத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்வதற்கும் ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசா கட்சியின் அமைப்பாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE