3 கோடி மோசடிமற்றும் பிரதமரின் சத்திர சிகிச்சை தொடர்பில் பிரதமரின் ஊடகச் செயலாளர் கருத்து

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான  அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து சுமார் 3கோடி ரூபா பணம்,  பிரதமருக்கு மிக நெருக்கமான ஒருவர் ஊடாக கடந்த 6 வருடங்களில் அவ்வப்போது மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

பிரதமரின் குறித்த வங்கிக் கணக்கின் தானியக்க பணப் பறிமாற்று அட்டையை பயன்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவருக்கு சம்பளமாக கிடைக்கப் பெற்ற பணத் தொகை எனவும் கூறப்பட்டது.

இந் நிலையில் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரொஹான் வெலிவிட்ட, இவ்வாறானதொரு சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை. மேற்படி சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் தமக்குத் தெரிந்தபடி தவறானவை ஆகும்.

இதேவேளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது தந்தையின் வங்கிக் கணக்கு தொடர்பான சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமருக்கு அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

எனது தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

அது உண்மைக்குப் புறம்பானது. நானும் என் தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியொருவரை மட்டுமே சந்தித்தோம். எனது தந்தை எந்த அறுவை சிகிச்சையும் செய்யவில்லை என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE