கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கனடா தலைநகர் ஒட்டவாவில் கடந்த மூன்று வாரமாக நடந்து வரும் போராட்டத்தை ஒடுக்க, போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், தொற்று பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, லாரி டிரைவர்கள், கொரோனா தடுப்பூசியின் இரண்டு ‘டோஸ்’களை செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, லாரி டிரைவர்கள் தலைநகர் ஒட்டவாவில் முக்கியமான சாலைகளில் லாரிகளை நிறுத்தி, போக்கு வரத்து பாதிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர, தலைநகர் ஒட்டவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், லாரி டிரைவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இந்நிலையில், போலீசார் நேற்று முன்தினம், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ௧௦௦க்கும் அதிகமான டிரைவர்களை கைது செய்தனர். மேலும், சாலைகளில் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த ௨௦க்கும் அதிகமான லாரிகளை கயிறு கட்டி இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர்.எனினும் டிரைவர்கள் போராட்டத்தை கைவிடாததால், ஒட்டவாவில் பதற்றம் நீடிக்கிறது.