சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதை தொடர்ந்து 3 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் இன்று வரை உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடுமையான நடவடிக்கைகளின் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தியதாக சீனா கூறினாலும், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் பெரும்பாலான மாகாணங்களில் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் மூன்று வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் ஹூபெய், ஃபுஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன.

முன்னதாக சினோவாக், சினோபார்ம் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை சிறுவர்களுக்கு செலுத்த சீன அரசு அண்மையில் அனுமதி வழங்கியது.இதைத் தொடர்ந்து சீனாவின் பல்வேறு மாகாணங்களில் 3 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சீன பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தயங்குகின்றனர். எனினும் அரசின் கண்டிப்பான நடைமுறைகளால் சிறுவர்களுக்கு தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.