செய்தி /கண்ணோட்டம்

யாழ் நூலகம்

யாழ்ப்பாணப் பொது நூலகம்

யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.[2][3] இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.